இனப்படுகொலையாளி கோட்டபாயா தான் ஆசிரியர் வரதராசனைக் கடத்தியதாக மகன் குற்றச்சாட்டு


எனது தந்தை கடத்தப்பட்டமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் கோத்தாபயவே ! வரதராஜன் பார்த்திபன்.

யாழ்ப்பாணத்தில்  புகழ்பெற்ற ஆசிரியராக இருந்த எனது தந்தையான வரதராஜன் கடத்தப்பட்டமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவே என பலமான சந்தேகம் இருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான வ.பார்த்திபன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துக்களை தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுசன பெரமுனவின் யெனாதிபதி வேட்ப்பாளர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராசபக்ச அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும்போது தான் எதிர்காலத்தின் ஜனாதிபதி என்றும் நீங்கள் கடந்த காலங்களில் நடந்தவற்றை பற்றி குழம்பிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கூறியிருந்தார். ஆனால் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு உண்மையில் எதிர்காலம் என்பது காணாமல் போன பிள்ளைகளும் உறவுகளுமே .அதனை தங்களின் எதிர்காலமாக நினைத்தே போராடி வருகின்றனர்.அவ்வாறான நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலரின் கருத்துக்கள் கண்டனத்துக்கு உரியது.
உண்மையிலேயே காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனை எவ்வாறு இருக்கும் என்று அனுபவித்தவன் தற்போதும் அனுபவித்து வருகின்றேன் என்ற வகையில் சில விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.கடந்த 2008/05/10 அன்று எனது தந்தை கொழும்பு வெள்ளைவத்தை தமிழ்ச் சங்கத்துக்கு அண்மையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டிருந்தார்.அவர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரத்தில் எனது அம்மாவும்,மாமாவும் வெள்ளைவத்தை 42 ஆவது ஒழுங்கையில் வைத்து மர்ம நபர்களினால் கடத்தப்பட்ட்னர்.ஒரே நாளில் அடுத்தடுத்து எனது குடும்பத்தார் கடத்தப்பட்ட்னர்.பின்னர் கடத்தல்காரர்கள் என்னுடைய அம்மாவினை மட்டும் பொரளையில் இறக்கிவிட்டு சென்றனர்.
ஆனால் என்னுடைய அப்பாவும்,மாமாவும் விடுவிக்கப்படாமல் காணாமல் போயிருந்தனர்.பின்னர் நாம் காவல்  நிலையம்,தொண்டு நிறுவனங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தோம்.எனது தந்தை கடத்தப்பட்டு 33 நாட்களின் பின்னர் கொழும்பு தெஹிவளை பகுதியில் கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் வேன் ஒன்றில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றனர்.
கடத்தல் காரர்களிடம் இருந்து எனது மாமா இன்றுவரை வரவில்லை.33 நாட்களின் பின்னர் வந்த எனது தந்தை என்னிடம் கூறியிருந்தார்.தன்னை கடத்தியவர்கள் கோத்தாபயவின் ஆட்கள் என கூறியதாகவும்,அரசியலில் ஈடுபடக் கூடாது கற்பித்தலை மட்டும் செய்ய வேண்டும் என்று.மேலும் தந்தையின் வாக்குமூலத்தின் படி இந்த கடத்தலிற்கு பின்னால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவே இருப்பார் என பலமான சந்தேகம் உள்ளது.
இதுமட்டுமல்லாது ராசபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே இது நடந்துள்ளமையினால் அவர்களே பொறுப்புக் கூறவேண்டும்.என்றார் வரதராஜன் பார்த்திபன்.

இச்செய்தி முகநூலூடாக கிடைக்கப்பெற்ற செய்தி.இதற்குப் பறை ஊடகம் பொறுப்பல்ல.பறை ஊடகம் இச்செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

Please follow and like us:

235total visits,1visits today